Thursday, August 14, 2008

வெண்டைக்காய் பொரியல்

நண்பர்களே! இன்னிக்கு நாம செய்யப் போறது வெண்டைக்காய் பொரியல்.

உயிரோட இருக்கும் போது



கொலை பண்ணினதுக்கப்புறம்



தேவையானவை :
வெண்டைக்காய் - 1/2 கிலோ
வெங்காயம் - பெரியது 1 / சிறியது 5,6
சிவப்பு மிளகாய் வத்தல் - 6,7
எண்ணெய் - 3 ஸ்பூன்
கடுகு - கொஞ்சம்
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
1. வெண்டைக்காயை சிறியதாக வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தையும் எப்பவும் போல் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய் வத்தல், கறிவேப்பிலையை முதலில் போட்டு வதக்கிக் கொள்ளவும்.

3. பின் வெட்டிய வெண்டைக்காய், வெங்காயத்தை அதில் போட்டு வாணலியில் ஒட்ட விடாமல் நன்றாகக் கிளறி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.

4. பத்து நிமிடங்கள் நன்கு வதங்கியதும் அதில் உப்பையும் சேர்த்துக் கிளறவும்.

அவ்வளவுதான் சுடச்சுட வெண்டைக்காய் பொரியல் தயார்.

முன்யோசனைக் குறிப்புகள் :
1. வெண்டைக்காயை ஒரு மணி நேரம் முன்பே வெட்டி வெயில் சிறிது நேரம் வைத்து எடுத்த பின் வதக்கினால் பிசுபிசுவென்று ஒட்டாமல் வரும்.

2. காய் நறுக்கும் போது இரண்டு, மூன்று வெண்டைக்காய்களாக சேர்த்து வெட்டினால் நேரம் மிச்சமாகும்.

3. சமைப்பதற்கு முன் வெண்டைக்காய் நிறைய இருக்கும். ஆனால் வதக்கியபின் கொஞ்சமாக சுருங்கிவிடும். எனவே காய் வாங்கும் போதே இதை மனசில் வைத்துக் கொண்டு தேவையெனில் கொஞ்சம் சேர்த்தே வாங்கவும். :)

Sunday, April 27, 2008

கத்தரிக்காய் புளிக்குழம்பு


நண்பர்களே ! இன்னிக்கு எப்படி சுவையான புளிக் குழம்பு வைக்கிறதுன்னு பார்க்கலாம்.

தேவையானவை :
புளி - ஒரு எலுமிச்சை அளவு
தக்காளி - 3 நடுத்தர அளவு
வெங்காயம் - பெரியது 1 / சின்னது 10
குழம்பு மசாலா - 3 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3/4
கத்தரிக்காய் - 2/3
தேங்காய் - 3 பத்தை
கடுகு - கொஞ்சம்
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - கொஞ்சம்

செய்முறை :
1. முதலில் ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி புளியை ஊற வைத்துக் கொள்ளவும்

2. தக்காளி, வெங்காயம், மிளகாய், கத்தரிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும்

3. தேங்காயை மிக்ஸியில் மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்

4. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலையுடன் நறுக்கிய வெங்காயம், கத்தரிக்காய், மிளகாய் போட்டு வதக்கிக் கொள்ளவும்

5. தக்காளியையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்

6. புளியை நன்றாக நீரில் கரைத்து அந்தத் தண்ணீரை வதக்கிய கலவையுடன் சேர்க்கவும். புளிச்சக்கையை கீழே போட்டுடணும் பாஸு. குழம்பிலே போட்டுடாதீங்க ;)

7. குழம்பு மசாலாவை இந்தக் கலவையுடன் சேர்த்து கொஞ்சம் தண்ணீரும் சேர்த்துக் கொள்ளவும்.

8. அப்புறம் அரைத்த தேங்காயை குழம்புடன் சேர்த்து கொதிக்க விடவும். உப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் புளிக்குழம்பு தயார். சோறு, இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும்.

குறிப்பு :
இதே போல கத்தரிக்காய்க்குப் பதில் வெண்டைக்காயையும் சேர்த்துப் புளிக்குழம்பு வைக்கலாம்.

குழம்பு மசாலாவுக்கு கடையில் கிடைக்கும் சக்தி அல்லது ஆச்சி குழம்பு மசாலா பயன்படுத்தலாம். வேலை எளிது.

படம் கிடைக்கலை. அதான் பச்சைக் கத்தரிக்காய் படம் போட்டிருக்கேன் ;)

Wednesday, April 23, 2008

உப்புமா கிண்டுவது எப்படி?


நான் பதிவுல உப்புமா கிண்டுறது எப்படின்னு சொல்லலை. அதுக்க்கெல்லாம் கில்லாடிகள் நிறைய பேர் இருக்காங்க. இது வேற. சாப்பிட உப்புமா கிண்டுறது எப்படின்னு தான் சொல்லப் போறேன்

தேவையானவை :
ரவை - 1 சிறிய டம்ளர் (1 ஆளுக்கு)
பெரிய வெங்காயம் - 1ல் பாதி
மிளகாய் - 2
கடுகு, கறிவேப்பிலை, உப்பு - கொஞ்சம்

செய்முறை :
1. ரவையை வாணலியில் போட்டு கொஞ்சம் பொன்னிறமாக வரும்படி நன்றாக வறுத்துக் கொள்ளவும்.

2. வெங்காயம், மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.

3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

4. வதக்கிய வெங்காயத்துடன் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து லேசாகக் கொதிக்க விடவும். அப்படியே உப்பையும் சேர்த்துக் கொள்ளவும்.

5. பின் வறுத்த ரவையை அதில் சேர்த்து விடாமல் கிண்டவும்.

5 நிமிடம் கழித்துப் பார்த்தால் சுவையான உப்புமா தயார்.

குறிப்பு : ரவையை தண்ணீருடன் சேர்க்கும் போது காஞ்ச மாடு கம்புல விழுந்த மாதிரி தண்ணியைக் குடிக்கும். பயந்துறாதீங்க. ஒன்னும் ஆகாது. தீயைக் குறைத்து வைத்துவிட்டுக் கிண்டுங்கள். அய்யோ பாவம்னு கூடக் கொஞ்சம் தண்ணீர் சேர்த்தால் அப்புறம் இப்படி ஆகிரும். அனுபவம் உள்ளவன் சொல்றேன். கேட்டுக்கங்க. :)

Saturday, April 19, 2008

எதற்கு இந்த வலைத்தளம்?


ஏற்கனவே ஏகப்பட்ட சமையல் வலைத்தளங்கள் இருக்கும்போது இதற்கு இந்த வீண்வேலை?
பேச்சிலர் சமையல் ஒன்னும் சுலபம் இல்லைங்க. காலையில் ஏழுமணிக்கு எழுந்திருச்சி அலுவலகம் 9 மணிக்கு போறதுக்குள்ள பல் விளக்கி, குளிச்சி அதுக்கப்புறம் சமையல் பண்ணி சாப்பிட்டு அலுவலகத்துக்கும் எடுத்துட்டுப் போறப்போ எப்படியெல்லாம் சுலபமாகவும், அதே சமயம் சுவையாகவும் சில எளிமையான, எப்பவும் கேள்விப்படுற உணவு வகைகளை செய்து சாப்பிட இந்தத் தளம் உதவும். இப்படியெல்லாம் சொல்லவும் ஆசைதான். முக்கியமாக பதிவெழுத எதுவும் சிக்காத போது சமையல் சாம்பார்னு ஒப்பேத்தவும் ஒரு வழி. ;). நமக்குத் தெரிஞ்சதைப் பகிர்ந்துக்குவோம்கிற எண்ணம் தான் காரணம்.

என்னவெல்லாம் எழுதப்போறீங்க?
சுடுதண்ணி வைக்கிறதில இருந்து சுண்டக்கஞ்சி காய்ச்சுறது வர சொல்லுவோம். எல்லோரும் சாப்பிடுற ஆனா சமைக்கத் தெரியாத சாம்பார்,ரசம்,கூட்டு,பொரியல் வைக்கிறது எப்படின்னு சொல்றதுதான் இந்த தளம்.

உண்மையிலேயே உபயோகமா இருக்குமா?
ஏன் இருக்காது? உங்க நண்பர்களுக்கு சமைச்சு போட்டு அவர்களை ஆம்புலன்சில் ஏத்தி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போற கடமை இருக்கே அநத பாக்கியம் உங்களுக்குக் கிடைக்க வேணாமா? நம்மளால நாலு டாக்டர் நல்லா இருந்தா என்ன சமையல பண்ணினாலும் தப்பில்லை.

Tuesday, April 15, 2008

சாம்பார் வைப்பது எப்படி?


முதலில் தமிழர்களின் தேசிய குழம்பான சாம்பார் வைப்பது எப்படின்னு பார்க்கலாம்.

முதலிலேயே சொல்லிடறேன் இது பேச்சிலர் சமையல் தளம். அது இது கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். சமாளிச்சிக்கோங்க. :)

தேவையான பொருட்கள் :
துவரம்பருப்பு - 200 கிராம் (4பேருக்கு)
தக்காளி - 3
வெங்காயம் - 2 பெரியது அல்லது 8 சிறியது
புளி - எலுமிச்சம்பழம் அளவு
சக்தி மசாலா சாம்பார் பொடி - 4 ஸ்பூன்
கடுகு, உளுந்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
எண்ணெய், உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு

செய்முறை :
1. முதலில் பருப்பைக் கழுவி குக்கர் அல்லது பாத்திரத்தில் நன்கு வேகவைக்கவும். குக்கர் என்றால் இரு மடங்கு தண்ணீர் ஊற்றி 2 விசில் அடிக்கும் வரை அடுப்பில் வேகவைக்கவும். பாத்திரம் என்றால் கையில் எடுத்துப் பார்த்து பருப்பு வெந்துவிட்டதா எனப் பார்த்துக் கொள்ளவும். கை சுட்டுக்கும் எனவே சுட்ட கையை நல்ல குளிர்ந்த நீரில் கழுவவும்.

2. பருப்பு வேகும் நேரத்தில் புளியை ஒரு சிறிய பாத்திரத்தில் ஊறவைத்துக் கரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.

3. பின்னர் வாணலியை(வானொலி அல்ல) அடுப்பில் வைத்து நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் நறுக்கிய தக்காளியைப் போட்டு மீண்டும் வதக்கவும்.

4. தக்காளி நன்கு வதங்கியதும் அதில் சக்தி சாம்பார் பொடியைப் போட்டு மறுபடியும் வதக்கவும். தேவையெனில் கொஞ்சம் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.

5. இப்போது அடுப்பில் தீயைக் குறைத்து வைத்துவிட்டு வேகவைத்த பருப்பையும், புளிக்கரைசலையும் வாணலியில் ஊற்றவும். பின்னர் தேவையான தண்ணீர் சேர்க்கவும்.

6. பின்னர் தேவையான அளவு உப்பைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

அவ்வளவுதான் கும்முன்னு சாம்பார் தயார். இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் எதற்கு வேண்டுமானாலும் ஊற்றிச் சாப்பிடுங்க.

குறிப்பு : சாம்பாரில் மேலும் முருங்கைக்காய், காரட் சேர்க்க வேண்டும் என்று நினைத்தால் துண்டுகளாக நறுக்கி பருப்புடன் சேர்த்து அவித்துக் கொள்ளவும். கத்தரிக்காய் சேர்க்க விரும்பினால் துண்டுகளாக நறுக்கி தக்காளியுடன் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்

Saturday, April 12, 2008

வணக்கமுங்கோ !!!!!!!!!!!


எல்லோருக்கும் வணக்கம். சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டின்கிற மாதிரி நாங்க பாட்டுக்கு சிவனேன்னு அக்கா கடையிலேயும், பொங்கல் மெஸ்ஸிலயும் சாப்பிட்டுட்டுக்கிட்டு இருந்தோம். எவனுக்குத்தான் அந்த யோசனை தோணுச்சுன்னு தெரியலை, திடீர்னு நான் திருப்பதி போயிருந்த சமயமாப் பார்த்து வீட்டிலே கேஸ் அடுப்பு, பலசரக்குன்னு எல்லாம் வாங்கிப் போட்டு "இனிமே தினமும் வீட்டில் தான் சமையல்" என்று சொல்லிவிட்டார்கள்.

சரி. நாமும் சமையல் பழகிக் கொள்வோமே என்று ஆரம்பித்து இன்றோடு மூன்று மாதங்கள் ஆகிறது. பரவாயில்லை. கொஞ்சம் ருசியாகவே சமைப்பதாக அறை நண்பர்களும், பக்கத்து வீட்டு நண்பர்களும் கூறுகின்றனர்.

எனவே நண்பர்களே நான் சமைத்தது, சமையல் செய்யும் போது சூடு பட்டது, நான் சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டு சிலர் மயங்கி விழுந்ததுன்னு எல்லாவற்றைப் பற்றியும் எழுதப்போகிறேன். வந்து கை நனைச்சுட்டுப் போங்க. :)